பாபநாசம்: மன்னை சென்னை எக்ஸ்பிரஸ் நீடாமங்கலம், தஞ்சையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னை சென்னை விரைவு ரயிலானது பாபநாசம் அருகிலுள்ள அம்மாப் பேட்டை, சாலியமங்கலம், பூண்டி, மாரியம்மன் கோயில் வழியாக செல்கிறது. ஆனால் மேற்கண்ட ஊர்களில் நிற்பதில்லை. நீடாமங்கலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நிற்கிறது. அம்மாப்பேட்டை அல்லது சாலிய மங்கலம் ஆகிய இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று சென்றால், சுற்று வட்டார 50 கிராம மக்கள் சென்னை செல்வதற்கு ஏதுவாக இருக்கும் ென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வக்கீல் அரியராஜபூபதி கூறுகையில், சாதாரண ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு நன்மைச் செய்யும் வகையில் மன்னை சென்னை விரைவு ரயிலை அம்மாப்பேட்டை அல்லது சாலிய மங்கலம் ஆகிய 2 இடத்தில் ஏதாவது ஒன்றில் நிறுத்த ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
தஞ்சை, : தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரைக்கால்- திருச்சி பயணிகள் ரயில் நேற்று காலை சாலியமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போது எதிர் திசையில் எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் வந்ததால் கிராசிங்குக்காக பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக விரைவு ரயில் சென்ற பின்னர் தான் பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். ஆனால் நேற்று விரைவு ரயில் சென்றபின்னரும் பயணிகள் ரயில் செல்லவில்லை. அப்போது ரயில்வே அலுவலர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்வதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட டிராலி வண்டியில் வந்தனர். இதனால் பயணிகள் ரயில் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்ததால் பல்வேறு அலுவல் காரணமாக செல்ல வேண்டிய பயணிகள் ஆத்திரமடைந்தனர். எனவே அவர்கள் ரயில் நிலைய அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலியமங்கலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டிராலியில் ரயில் நிலையத்திற்கு வந்த அலுவலர்கள் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் அரைமணி நேரம் தாமதத்திற்கு பிறகு
பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது.